ரயில் நிலையம் இல்லாத ஊரில் பிறந்து வளர்ந்ததால் மனதில் ரயிலின் மேல் எப்போதும் ஒரு தீராக் காதல் இருந்தது. கோவை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்துக்கு ரயிலை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பது இல்லை. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகியன என்றுமே பேருந்துப் போக்குவரத்தில் மற்ற பகுதிகளைவிட முன்னேறி இருந்தன. இதனால் அதுவா அதனால் இதுவா தெரியாது. ஆனால் கலக்குவதற்குக் கல்லூரிக்குப் போகும் இளசுகள், 10 மணிக்கு மேல் அலுவலகங்களுக்கு விசிட் பண்ணும் பெரிசுகள் காசு மிச்சம் பண்ண வேண்டி சீசன் டிக்கட்டில் அதில் போவார்கள். உருப்படியான வேலை இருக்கும் யாரும் அந்தப்பக்கமே தலை காட்ட மாட்டார்கள்.
சித்தூரில் இருந்தவரை ஒரே ஒரு முறை ரயில் பயணம் அமைந்தது. அங்கிருந்து 8 கி.மீ. பேருந்தில் சென்று கிணத்துக்கடவில் பொள்ளாச்சிக்கு ரயில் ஏறினோம். அது சுமார் முக்கால் மணிப் பயணம் தான். அங்கிருந்து பழனிக்கு பிரயாணம். ஆனால் அன்று அடைந்த ஆனந்தம், 20 வருடம் கழித்து ஜெட் ஏர்வேஸில் முதல் முறையாய் பறந்த போது கால்பங்கு கூடக் கிடைக்கவில்லை.
சில வருடங்களுக்குப் பிறகு பொள்ளாச்சிக்கே குடிபோய்விட்டோ ம். ஒரு நாள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு போயிருந்தபோது அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் அது கண்ணில் பட்டதும் காணாமல் போன காதலியைத் திரும்பப் பார்த்தாற்போல் எல்லையில்லா ஆனந்தம்! அது வேறு ஒண்ணுமில்லை, ஒரு ரயில்வே கேட்! 'கோயிலெல்லாம் நீங்க பாத்துட்டு வாங்க, நான் ரயிலைப் பாத்துட்டுத்தான் வருவேன்' என்று அம்மாவிடமும், அண்ணனிடமும் சொல்லிவிட்டு அந்தக் கேட்டருகே நின்று தொடுவானம் வரை நீண்டு கிடந்த தண்டவாளங்களை ரசித்துக் கொண்டு காத்திருந்தேன். யாரோ சொன்னார்கள் பஸ் போல ரயில் அடிக்கடி வராதாம். 'சும்மா சொல்கிறார்கள், என்னை ஏமாற்ற' என்று எண்ணிக் கொண்டே, 'ரயிலை இவ்வளவு கிட்டத்தில் பார்க்க எப்பேர்ப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கு, என்ன ஆனாலும் இன்னிக்குப் பார்க்காமல் திரும்புவதில்லை' என்று நின்றேன்.
சாமி தரிசனம் முடிந்து வந்தவர்கள் என்ன கூப்பிட்டும், என் தேவி தரிசனம் கிடைக்காமல் நான் வர மாட்டேன் என்று நின்றேன். அங்கிருந்தவர்கள் எல்லாரும் இன்னும் 4 மணி நேரம் கழிச்சுத்தான் அடுத்த ரயில் என்றார்கள். இருக்கட்டுமே அதனால் என்ன, நான் இங்கேயே நிக்கிறேன். அதுக்கப்புறம் வந்து என்னைக் கூட்டிட்டுப் போங்கள் என்று மல்லுக்கட்ட, அம்மாவும் அண்ணனும் கோபம் தலைக்கேறி கிட்டத்தட்ட என்னை இழுத்து வந்துவிட்டார்கள். எத்தனை படங்களில் பார்த்திருப்போம், காதலியிடமிருந்து காதலனைப் பிரித்து இழுத்துச்செல்லும் காட்சியை, அந்தக் காதலனே தோற்கும் அளவுக்கு அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.
ரயில் பயணம் தொடரும் (ப்ராமிஸ், நாளையே!)
விளம்பர இடைவேளையில் ரயில் சம்பந்தப்பட்டஒரு சர்தார்ஜி ஜோக் (முன்னமே கேட்டவர்களும் என் காதலிக்காக சிரித்து வைக்கவும்):
* * * *
'ஏம்பா தாடி, கில்லாடிபா நீ, எப்டியோ மேலே எடம் புட்ச்சிட்டியே'
'சாந்தாசிங்கா கொக்கான்னேன், என்னால விடியற வரைக்கும் சீட்ல உக்காந்து வர முடியாதுன்னு தான் போர்ட்டருக்கு துட்டு வெட்டி எடம் புடிச்சேன்'
'உம்...இன்னா பண்ண, காத்தாலவரைக்கும் நா ஒக்காரத்தான்...'
'ஏம்பா, நீ தான் முழிச்சிட்டிருக்கப் போற இல்ல, நான் 20 ருவா தாரேன், என்னை காலைல 4 மணிக்கு எழுப்புறியா?, நான் இறங்கணும்'
'சரி, சொம்மா துட்டு வருதுன்னா எனக்கு இன்னா கஸ்க்குதா, குடுபா, நானாச்சு ஒன்ன எயுப்ப'
* * * *
'கொர்ர்...கொர்ர்ர்....'
'அடச்சே, ஒரு சேவிங்குக்கே நமக்குப் பத்து ரூவா கூட எவனும் தர்ரதில்லை, பாவம்பா இந்தத் தாடிக்காரன். இருவது ரூவா குட்துக்கறான். சொம்மாத்தானே குந்தீக்கிறோம். அல்லாரும் சப்ஜாடாத் தூங்கிட்டானுக. அவனுக்கு வேற தாடியும் மீசையும் பொதராட்டமாக் கெடக்கு, அவன் அப்டியே தூங்கட்டும், நான் அவனுக்கு சூப்பரா சேவிங் பண்ணி வுடறென் பாரு..'
* * * *
'இந்தாபா..உங்க ஊரு வந்த்ச்சுப்பா, ஏந்திரி'
'அட..அதுக்குள்ளயா? ஓ...தேங்க்ஸ்பா, வரட்டா'
* * * *
'பீவி..இங்க பாத்தியா என்ன வாங்கி வந்திருக்கேன்னு'
'அய்யய்யோ நீங்க யாரு...அட நீங்களா? என்ன ஆச்சு, ஏன் இப்படி? ஆளு அடையாளமே தெரியல!'
'ஏன்?'
'போயிக் கண்ணாடியிலே பாருங்க தெரியும்'
* * * *
'அடப்பாவீ! அந்தப் பய சரியான ப்ராடா இருக்கான்'
'யாரு?'
'அதான், கீழே சீட்ல இருந்தவன். 4 மணிக்கு எழுப்பி விடுன்னு நான் குடுத்த 20 ரூவாயை வாங்கீட்டு, அந்த ராஸ்கல் வேற யாரையோ எழுப்பி விட்டுருக்கான்.'
* * * *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக