ஞாயிறு, நவம்பர் 16, 2003

போலீஸ் எப்படித் தேடவேண்டும்

தி ஹிந்து பத்திரிகையாளர்மேல் சட்டமன்றம் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடைக்குப்பின் மெதுவாக அமுங்கிவிடும் என்றே தோன்றுகிறது. இந்த வாரம் ஜுனியர் விகடனில் இது பற்றிய கட்டுரையில் தி ஹிந்துவின் ஜெயந்த் தன் வீட்டில் தன்னைத் தேடிவந்த போலீசார் எப்படி நடந்து கொண்டார்கள் என்று அளித்த பேட்டி சிரிப்பை வரவழைக்கிறது. தலைப்பு: போலீஸ் ஆடிய அசிங்க நாடகம். அதில்,

போலீஸார் வாரண்ட் எடுத்துக்கொண்டு இரண்டாவது முறை வீட்டுக்கு வருவதற்குள், நான் என் மனைவிக்கு போன் செய்தேன். என் குரலை போனில் கேட்டதும், சின்ன குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதாள். 'அம்மாவுக்கு ஆறுதல் சொல்' என்று கல்லூரி மாணவியான என் மகள் நீத்தாவுக்குச் சொல்லலாம் என்றால், மகளும் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு, 'சோதனை' என்ற பெயரில் எங்கள் வீட்டில் டாய்லெட்டில் ஆரம்பித்துப் படுக்கையறை வரை போலீஸார் தலைகீழாக கவிழ்த்துப் பார்த்து ஆடிய அசிங்க நாடகம் எல்லாம்தான் எல்லோருக்குமே தெரியுமே!

என்னுடைய அப்பா மிகவும் வயதானவர். உடல்நலம் குன்றியவர். அம்மாவுக்கோ, அப்பாவைவிட மோசமான உடல்நிலை. ஊன்றுகோல் உதவியுடன்தான் நடப்பார். நாங்கள் வசிக்கும் அதே அபார்ட்மெண்ட்டின் கீழ்த்தளத்தில் உள்ள இன்னொரு ஃப்ளாட்டில்தான் அவர்கள் இருவரும் வசிக்கிறார்கள். நடந்த எந்த சம்பவத்தையுமே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்போது போன் செய்தாலும், அவர்கள் அழுகையை மட்டும்தான் என்னால் கேட்க முடிந்தது. இந்தச் சம்பவத்தினால் அவர்களது உடல் நிலை இன்னும் மோசமாகிவிட்டது...


இதில் எதுவும் புதிதாக, எங்குமே நடக்காத எதுவும் போலீஸ் செய்ததுபோல் தெரியவில்லையே. வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்போன எல்லா இடத்திலும் எப்படி நடந்திருக்குமோ அப்படித்தான் நடந்திருப்பதாகத் தெரிகிறது. வாசலிலேயே 'அய்யா உள்ளே இருக்கிறாருங்களா?' என்று விசாரித்துவிட்டு, 'சரிங்கம்மா, வந்தா லாக்கப்புக்கு வந்து வீக் எண்டை எங்க ஸ்டேஷனிலேயே கழிச்சுட்டுப் போகச்சொல்லுங்கம்மா' என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? உள்ளே வந்து ஒரு இடம் விடாமல் தேடுவது தான் கைது செய்ய வந்த போலீஸின் கடமை. அந்த தண்டனை சரியா தவறா என்பது வேறு, தலைமறைவாய் இருப்பவரைத் தேடும் போலீசின் நடவடிக்கை வேறு. டாய்லெட்டிலோ படுக்கை அறையிலோ தேடுவதில் என்ன அசிங்கம் இருக்கமுடியும்? எனக்குப் புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...