கடவுள் உண்டா? இல்லையா? இந்த விவாதமே தேவையற்றதா? மூன்று கேள்விகளுக்குமே ஆம் என்று வாதிட ஆதாரம் உண்டு. உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை. விவாதம் தேவையில்லை என்றால் அதுவும் சரியே.
குளியலறை இருக்கிறதே, அதைப்போன்றது தான் என் மனம். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை எங்கும் நான் போடும் வேடங்களை நான் களைந்து என்னை முழுதாய் அங்குதான் காண்கிறேன். என் மனதில் தோன்றும் அழுக்கு எண்ணங்கள் அங்கு கிளம்பும் துர்நாற்றங்களுக்கு சமம். இலக்கியம், சமயம், சமூக நெறிமுறைகள் இவை கொடுக்கும் நல்ல எண்ணங்கள் எல்லாம், நான் அவ்வப்போது அந்த அறையில் பரப்பும் வாசனைத் துளிகள்.
தினமும் துர்நாற்றங்கள் கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன. என்னால் அவற்றைத் தவிர்க்க முடியவில்லை. அந்த அறையில் கூடாதென்றால் வேறு எந்த இடத்தில் கூடும்? அனைவரும் புழங்குகிற மற்ற அறைகள் சில நாகரிக எல்லைகளுக்கு, எதிர்ப்பார்ப்புகளுக்கு உட்பட்டவை. அதேபோல் தான் நான் மற்றவர்களுடன் பழகும் பொழுதுகளில் கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் நடப்பதும். தனிமையில் தான் அழுக்கும், துர்நாற்றமும். எனக்கு எந்த வாசனையும் பிடிக்காமல் தான் இருந்தது. என்னால் முடிந்த அளவு சுத்தம் செய்து பார்த்தேன். ஆயினும், அறைக்கு வெளியே போய் விட்டுத் திரும்புகையில், என் நாசி பழைய வாசத்தின் எச்சம் இன்னும் இருப்பதை எப்படியோ கண்டுகொள்கிறது. எனவே எனக்கு வாசனைத்துளிகள் தேவைப்படுகின்றன.
இப்படி நாற்றத்திற்கும் அதற்கெதிரான நறுமணத் தாக்குதலுக்கும் நடுவே எத்தனை நாள் அல்லாடுவது? குளியலறையிலேயே தங்கியிருந்து, நாற்றம் கிளம்பும் முன்பே தயாராய் நறுமணம் என்ற ஆயுதத்தை எங்கும் விரவிப் பரப்பி நல்லுணர்விலேயே அந்த அறையை வைக்க வழியில்லையா? கொண்டுவந்தேன் அறையின் வாயுவைப் புதுப்பிக்கும் ஒரு வில்லை. தொங்கவிட்டேன் அதை அறையின் உள்ளே.
அவ்வப்போது காற்றில் பரப்பிவிடும் வாசனைத்துளிகளின் அளவுக்கு அது சுகந்தமாயில்லைதான். ஆனால் அது நின்று பரவி, அப்படியொரு துர்நாற்றம் இங்கு இருந்ததா என்று கேட்குமளவிற்கு என் குளியலறையை சுத்தமாக்கியது. இப்போதும் அந்த அறையில் துர்நாற்றங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை உறுத்தவில்லை, அதைச்செய்தது அந்த வில்லை.
என் எண்ண அழுக்குகளுக்கும் அதற்கான எதிர்விளைவைக் கொடுக்கும் சீரிய சிந்தனைகளுக்கும் மேல் அந்த 'வில்லை'யைப்போல் கிடைத்தது தான் இறை சிந்தனை. அது கட்டாயம் தேவைதானா? இல்லை, அதுவும் ஒரு பிற்சேர்க்கைதான், செயற்கை வாசனைதான். ஆனால், என்று என்னால் துர்நாற்றங்கள் உருவாவதையே தவிர்க்க முடிகிறதோ, அன்று இந்த செயற்கை வாசனையையும் தவிர்க்கமுடியும். என்று என்னால் அழுக்கு எண்ணங்களை அறுக்க முடிகிறதோ, அன்று எனக்குக் கடவுள் தேவையில்லை. என்று நான் முற்றும் உணர்ந்த ஞானியாகிறேனோ, அன்று எனக்கு இறைநம்பிக்கை ஒரு சுமை. அன்று என் இல்லத்தில் அறைகளே இருக்காது. யாரிடமும் ஒளிக்க, மறைக்க என்னிடம் எதுவும் இருக்காது. அதுவரை எனக்கு இந்த வில்லை தேவை.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக