ரோச்சஸ்டர் வந்த புதிதில் பெரிய பெரிய பல்லாங்காடிகளில் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தோம். பால், ரொட்டி, பழம், மாவு, சோப்பு, சீப்பு, சர்க்கரை, காய்கறிகள் என ஒரே இடத்தில் எல்லாம் கிடைத்தது. கோவையிலும் பல்லாங்காடிகள் வந்துவிட்டிருந்தாலும் எங்கம்மாவுக்கு ரங்கே கவுடர் வீதியில் அந்த நெருக்கமான சந்துகளில் கடைகடையாய் ஏறி இறங்கி 'ஓல்சேல்' கடைகளில் பொருட்கள் வாங்கினால்தான் திருப்தி. வீட்டில் அம்மாவின் ராஜாங்கம் நடந்தவரை இது நடந்ததில் ஆச்சரியமில்லை. பிறகு ஒரு நாள் வழக்கம் போல் மாமியார்-மருமகள் உறவு (புடலங்காய்!) ஒரு ப்ரேக்பாயின்டில் உடைந்துபோனபிறகு மருமகள் ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இது தொடர்ந்ததுதான் ஆச்சரியம். 'நான் பார்த்து வாங்கினவரை எல்லாம் கம்மி விலைக்கு வாங்கினேன், இவள் வந்து டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் நோகாமல் வாங்கி காசைக் கரியாக்குகிறாள்' என்று ஒரு சொல் சொல்ல இடம் கொடுக்காக் கூடாதென்ற வைராக்கியம் கொண்ட கவரிமான், அதான் என்னவள், சென்ற ஆட்சியில் நடந்த திட்டமானாலும் உடைப்பில் போடாமல் தொடர்ந்தாள். இப்படி கடைவீதிக்குப் போய், நாலு கடை நடந்து வாங்குவது ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது இருவருக்கும். இந்த சந்தோஷம், அதது அந்த இடத்தில் இருந்த பல்லாங்காடிகளில் பொருள் வாங்கும்போது கிடைக்கவில்லை. அதிலும் 'மார்க்கெட்டுக்குப்போய் வாங்கினால்தான் காய்கறி, மற்றதெல்லாம் மண்ணாங்கட்டி' ரீதியில் ஒரு ரத்தத்தில் ஊறிவிட்ட நம்பிக்கை.
ஒரு தள்ளுவண்டியில் எல்லாவற்றையும் ஏற்றி அந்தப் பெரிய கடையை ஒரு சுற்றுவந்து ('பட்டர்மில்க் எங்கே கிடைக்கும்?' '13வது ஐலுக்கு நேரே டைரி ஐல் எக்ஸ்டென்ஷன் இருக்கும் பாருங்க', 'இதென்ன உருளைக்கிழங்கில் இத்தனை வகை, எதை வாங்கினால் பொடிமாஸ் செய்யலாம்?' 'ஏன் இந்த வெங்காயம் அதைவிட ரெண்டு மடங்கு விலை?') பில் போடுமிடத்தில் கன்வேயரில் வைத்து பீப்..பீப் என்று பில் போட்டு, அதிலும் அந்தக் குண்டுப்பெண்கள் ('அதென்ன இந்த அமெரிக்காவில் எல்லாப் பெண்களும் இப்படி அநியாயத்துக்குக் குண்டுகளாக இருக்கிறார்கள்?'. 'சரி, சரி, எந்தப்பொண்ணோ எப்படியோ இருந்துட்டுப் போறாள், உங்க பொண் நைசா கேண்டியெல்லாம் கன்வேயரில் தள்ளுறாளே அதப் பாருங்க') கொத்தமல்லிக்கட்டை சொல்லிவைத்தாற்போல பார்ஸ்லீ என்று புரிந்துகொண்டு பில் போடுவதைக் கண்டும் காணாமலும் இருந்துகொண்டு (பார்ஸ்லீ விலை 50 காசு, கொத்தமல்லி ஒரு ரூவா, 80 காசு, ரூவா=டாலர், காசு=சென்ட்)....ம்..என்ன இருந்தாலும் மார்ர்க்கெட்டுக்குப்போய்...முதல் பாராவைப் பார்க்கவும்.
அடித்தது பார் யோகம்; 'இங்கேயும் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கலாம், எடைக்குப் பதிலாய் கூறு போட்டு விற்பதை வாங்கலாம், ஏர்கண்டிஷனோ, ஹீட்டரோ இல்லாமல் திறந்தவெளியில் நாலு கடை பார்த்து விசாரித்துப் பொருள் வாங்கலாம்' என்று நண்பர் ஒருவர் கூட்டிப்போய்க் காண்பித்ததும் ஏதோ இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்றது போல் ஒரு சந்தோஷம், முக்கியமாக அன்பு மனையாளுக்கு. நிறைய அமரிக்க நகரங்களில் இருக்கிறது இந்த மார்க்கெட்டுகள். Public Market/Farmer's Market என்ற இரு பெயராலும் வழங்கப்பட்டு வந்தாலும், இங்கு நாங்கள் கேள்விப்பட்டது Farmer's Market என்பதையே. ஆனால் பெயர்ப்பலகை Public Market என்றே இருக்கிறது.
வரிசையாய் கடைகள், கடைகள் என்ன கடைகள், அவரவர் பலகைகளால் தற்காலிகமாய் செய்துகொண்ட மேடைகள், அவ்வளவே. ஒரு சரக்கு வண்டி முதுகைக் காண்பித்துக்கொண்டு கடைகளுக்குப்பின் நிற்கும். அதிலிருந்து கடைக்காரர், அவர் பையன், பெண், மனைவி, கணவன் யாராவது ஒருவர் அவ்வப்போது பொருட்களை இறக்குவார். எல்லாக் காய்கறியும் கூறுபோட்டுத்தான் வைத்திருப்பார்கள். சிறுசிறு கூடைகளில் வரிசையாய் வைத்து அட்டைகளில் விலையை எழுதி, கூவிக்கூவி விற்பார்கள். பெரும்பாலும் வெள்ளையரே இருந்தாலும், கறுப்பர், சீன முகம் கொண்ட ஆசியரும் இருப்பர். பெரும்பாலும் குளிர்பதனத்தில் வைக்கப்படாமல் காய்கறிகள் இருப்பதனால் நாம் வாங்கிவந்தபின் நம் வீட்டில் அதிகநாள் தாங்குகிறது (என்று என் மனைவியின் அபிப்ராயம்). பார்கோடு கடைகளைப்போல் அல்லாமல் சீசனைப் பொறுத்து விலை மாறுவதில் ஒரு சுவாரசியம். ஆப்பிள் சீசனில் ஒரு கூடை ஒரு டாலருக்குக் கிடைக்கும். சமயத்தில் கடைகளில் கிடைக்காத வாழைக்காய், சேனைக்கிழங்கு கூடக் கிடைக்கும். எல்லாம் கூறுதான்.
அங்கு போய் பொருள் வாங்குவது சொந்த ஊர் அனுபவத்தைத் தருவதற்கு இன்னொரு காரணம், கார் நிறுத்த இடப்பற்றாக்குறை. இங்கே அமெரிக்காவில், எக்கரா ஏக்கராவாக கார் பார்க்கிங் வசதி செய்திருப்பார்கள் ஒவ்வொரு கடையிலும். சில சமயம் கார் நிறுத்தின இடத்திலிருந்து கடை வாசலுக்குப் போக இன்னொரு கார் கிடைக்குமா என்று நினைக்கும் அளவுக்கு இவை பெரிதாய் இருக்கும். ஆனால் எங்க ரோச்சஸ்டர் மார்க்கெட்டில் நிறைய முறை கார் நிறுத்த இடம் தேடி இரண்டுமுறை கிரிவலம் வரவேண்டியிருக்கும். அப்படியே ஒப்பணக்கார வீதியில் கார் நிறுத்த அலையும், கூலிக்காரர் முக்கில் டூவீலரே நிறுத்த இடம்தேடும் அதே சுகத்தையும் தரும். அடாடா..
நம் ஊரிலும் உழவர் சந்தையெல்லாம் கொண்டுவந்தார்களே அது அரசியலில் வேறு மாட்டி அடிபட்டதே, அதை இன்னும் போய்ப் பார்க்கவில்லையே என்று தோன்றுகிறது. மீண்டும் ஊரில் போய் செட்டில் ஆகும்போது கட்டாயம் அதைப்போய்ப் பார்க்கவேண்டும், அதுவரை அப்படி ஒன்று இருந்தால்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
திங்கள், டிசம்பர் 29, 2003
அமெரிக்காவில் உழவர் சந்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக