செவ்வாய், டிசம்பர் 23, 2003

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- ஒலி ஆராய்ச்சி


யேசு கிருஸ்துவை ஆங்கிலத்தில் 'ஜீசஸ்' என்று சொல்கிறோம் ஆனால் ஏன் தமிழில் ஏசு, இயேசு, யேசு என்றெல்லாம் சொல்கிறோம்? 'புதிய ஏற்பாடு' படித்தவர்களுக்குத் தெரியும், மேத்யூவை 'மத்தேயு' என்றும், பீட்டரை 'பேதுரு' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும், இது ஏன்? ஏன் சிலர் தமிழில் எழுதும்போது ஜெர்மனியை யேர்மனி என்று எழுதுகிறார்கள்? கொஞ்சம் அறிவையும் நிறைய ஊகத்தையும் வைத்து ஒரு அலசல்.

ஒரு சின்ன அறிவிப்பு, இது எந்த விதத்திலும் மதநம்பிக்கைகளை விமர்சிக்க எழுதப்பட்டதல்ல. அப்படி ஏதும் தெரிந்தால், அதைச்சுட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

மற்ற ஐரொப்பியர்களின் இந்திய விஜயத்திற்கும் ஜெர்மானியர்களின் விஜயத்திற்கும் வேறுபாடு உண்டு. ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர், டேனிஷ்காரர்கள் போன்றோர், இங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்த்ததும், அதில் இறுதியில் ஆங்கிலேயர் பெருமளவில் வெற்றிபெற்றதும் தெரியும். இந்த ஜெர்மானியர் என்ன செய்தனர்? அவர்கள் பணி அரசியலைவிட கிறிஸ்தவ மதக்கருத்துகளைப் பரப்புவதிலேயே இருந்தது. ஆனால் வெறும் சமயப் பிரசாரர்களாய் இருக்காமல், கலை, மொழி, இலக்கிய வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாய் இருந்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, இப்படி சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர்களில் தமிழர்களால் என்றும் மறக்க முடியாதவர்கள் ஜி.யு. போப் மற்றும் 'வீரமாமுனிவர்' என்கிற கான்ஸ்டான்டைன் பெஸ்கி. ஜெர்மானியர்தான் சமஸ்க்ருத நூல்களை, குறிப்பாக வேதம் முதலானவற்றை ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினர் என்றாலும், அவர்கள் சமஸ்க்ருதத்தை படிக்க ஆரம்பித்ததற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழைப் படிக்க ஆரம்பித்தார்கள். இது பற்றி சில விவரங்கள் 'தமிழியலும் ஜெர்மானியரின் தேடுதலும்' என்ற இந்த ஆங்கிலக் கட்டுரையில் கிடைக்கும். ஸீகன்பாக் (Ziegenbalg) என்பவர்தான் முதன்முதலில் 1708-இல் (சுமார் 300 வருடங்களுக்குமுன்!) தமிழ் அகராதி(அகரமுதலி?)யைத் தொகுத்திருக்கிறார்.

சரி, தொடங்கிய பிரச்னைக்கு வருவோம். நான் கொஞ்சகாலம் கோவையில் பாரதீய வித்யா பவனில் ஜெர்மன் மொழி படித்திருக்கிறேன். படிச்சதென்னவோ, அரிச்சுவடி மட்டம்தான். ஆனா சில விஷயங்கள் பச்சென்று ஒட்டிக்கொண்டன. ஜெர்மன் மொழிக்கும் தமிழுக்கும் ஒரு ஒற்றுமை. இந்த ஆங்கிலத்தைப் போல ஒரே எழுத்து வடிவத்துக்கு பலப்பல பேச்சு வடிவம்ங்கிற குழப்பம் எல்லாம் கிடையாது. தமிழ் போலவே (k, h, g எல்லாத்துக்கும் ஒரே ககரம் இருக்குன்னு ஓரத்துலே யாரோ சொல்றது கேட்டாலும்) ஒரு குறிப்பிட்ட மாதிரிதான் ஓசை இருக்குது. சின்ன உதாரணம், ஆங்கிலத்தில் 'read' என்பதை 'ரீட்', 'ரெட்' அப்படி ரெண்டு விதமா சொல்றோம். 'red' ன்னு எழுதினாலும் அதே 'ரெட்'ன்னு சொல்றோம். ஜெர்மன் இந்த மாதிரியெல்லாம் குழப்பாது. ஒரு சில விதிவிலக்கு இருந்தாலும் (நமக்கு g,h,k மாதிரி:-) பொதுவா ஒரு எழுத்துவடிவத்துக்கு ஒரு ஓசைதான்.

சரி அதுக்கு என்ன இப்ப?

அங்கதான் விஷயமே இருக்கு. ஆங்கிலத்தில் A தமிழில் அ/ஆ மேலும் எ/ஏ என்ற இரு ஒலிக்குறிப்புகளுக்குமே பயனாகும். ஆனா ஜெர்மனில் முதல் வகை ஒலிக்கு A-வும் இரண்டாம் வகைக்கு E-யும் பயனாகும். இதையே திருப்பிப் போட்டா, E வரும் இடத்தில் எல்லாம் அவர்கள் எ,ஏ இரண்டு ஒலிகளைத்தான் குறிப்பர். ஆக, Peter என்பது ஆங்கிலத்தில் பீட்டர் என்றாலும், ஜெர்மனில், பேட்டெர் என்றாகும். இன்னொன்று T என்ற மெய்யெழுத்தின் விசேஷம், அதை அவர்கள் நாம் சொல்வதைப்போல் அவ்வளவு 'பொட்டே'ரென்று போடாமல், பொதேரென்று தன் போதுவார்கள்! இதே காரணத்தால்தான் 'இடலி' தமிழில் 'இத்தாலி' ஆனது. ஆக, அடுத்த மருவல் பீட்டர்->பேட்டெர்->பேத்தெர். தமிழில் ஏதோ ஒரு இலக்கண வழக்கு இருக்கும்போல, அதாவது 'ர்' என்பதில் பெயர்ச்சொற்களை முடிக்காமல் 'ரு'வாக்கி முடிப்பர் போல. தெலுங்குக்காரர்கள் மாதிரி. அப்படி மாறி 'பேதுரு' ஆனது. இதே மாதிரித்தான் Mark 'மாற்கு' ஆனதும்.

அடுத்த விசேஷம், இந்த J என்ற ஒலி. இது ஜெர்மனில் அதிசயமாய் Y என்ற ஒலியாவதுதான் ஆச்சர்யம். நமக்கு ரொம்பப்பிடித்த 'ஆமாம் சாமி'க்கு ஜெர்மனில் 'ja' தான். ஆனால் அது சொல்லப்படுவது 'யா' என்று! உண்மையில் எதுக்கெடுத்தாலும் 'யா..யா' என்று சொல்லுவதற்கு இவர்கள் தான் முன்னோடியாக இருந்திருக்கவேண்டும். ஆக எங்கெல்லாம் J வருதோ அங்கெல்லாம் Y போடுங்க. E வந்தா ஏ போடுங்க, அதனாலதான் Jesus யேசுஸ்... இல்லியே, அப்பக்கூட கடைசி எழுத்து உதைக்குதே. அது இன்னொரு மரபு, கடைசியில் வரும் S-ஐ சைலன்ட்டா விடுவது. இதே காரணத்தால்தான் Judas, யூதாஸ் ஆகாமல் 'யூதா' ஆவதும்.

இதெல்லாம் சரி, இன்னும் Jacob எப்படி யாக்கோபு ஆனார், John எப்படி யோவான் ஆனார்?

அதே சட்டங்கள்தானே இங்கும். முதலில் சொன்னபடி ஜெர்மனில் O-வுக்கு அ, ஒ என்றெல்லாம் பல ஓசை கிடையாது. எனவே Jacob, யாக்கோப்->யாக்கோபு. அதே மாதிரி இன்னொன்று O என்பது ஒ என்றால் OH என்பது ஓஆ என்று கூட்டு உயிரெழுத்தாகும். இது ஒருமாதிரி 'குழூஉக்குறி' என்பதில் வரும் ஊகாரம் மிகுந்து 3 மாத்திரை நீளம் ஆகுதே, மற்றும் 'ஔ'வில் 'அகரம்+உகரம்' ஆகிய இரண்டும் கூடுதே, அதுமாதிரி ஒரு கூட்டு ஒலி. இப்போது என்ன ஆச்சு? John 'யோஆன்' ஆனாரா? அதைத்தான் கொஞ்சம் சுலபமாக யோவான் என்று ஆக்கியிருக்கிறார்கள் மாடர்ன் அகத்தியர்களான நம் பாதிரியார்கள்.

இதே வழியில் போனால் J என்ற ஒலிக்கும் G என்ற ஒலிக்கும் ஆங்கிலத்தில் நெருங்கிய உறவு இருப்பதும், அப்படியே ஜெர்மனியில் வரும் ஜகர ஒலிக்கு J-வைப்போட்டு அப்புறம் அதையே யகரமாக்கினால் ஜெர்மனி யெர்மனியாகும்!

எது எப்படியோ மதம் பரப்ப வந்தவர்கள் வெறும் மதத்தைப் பரப்பாமல் ஒரு சமுதாயம் தன் வேர்களை அறிந்துகொள்ள பெரும் உதவி செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

6 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

சில மாதங்கள் டாய்ட்ச்லாந்தில் இருந்து டாய்ட்ச் கற்றுக் கொள்ள முயன்றதால், நீங்கள் விளக்கி உள்ளதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழில் விவிலியத்தை எழுதியது டாய்ட்ச் நாட்டவர்கள் தானா என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்த தொடுப்புகள் இருந்தால் தாருங்கள். ஏனென்றால் அதற்கு முன்பே பிற ஐரோப்பியர்கள் பேச்சு வழியிலாவது கிறித்தவப் பெயர்களை அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். எனவே, இக்கிறித்தவப் பெயர்களை டாய்ட்ச் மொழியோடு முடிச்சுப் போடாமால் பிற மொழிகளுடனும் ஒப்பிட முடியும். ஆங்கிலம் தவிர்த்த பிற ஐரோப்பிய மொழிகளில் எல்லாம் கிறித்தவப் பெயர்கள் ஒப்பு நோக்க வகையிலேயே ஒலிக்கின்றன. இவற்றை ஐரோப்பியத் தாக்கம் என்று சொல்வதை விட கிறித்தவம் தோன்றிய பகுதிகள், மூல மொழிகளில் உள்ள ஒலிப்புடன் ஒப்பு நோக்க வேண்டி இருக்கும். நெதர்லாந்திலும் j ய தான். என் வீட்டுத் தோழன் பெயர் jonathan. அழைப்பது யோனத்தன் என்று.

ஜெர்மனியை மட்டுமன்று ஜப்பான். ஜட்டி போன்ற பெயர்களைக் கூட யப்பான், யட்டி என்று எழுதும் வழக்கம் இலங்கையிலேயே பெரிதளவில் இருக்கிறது. இது எந்த மொழியின் தாக்கம் என்று பார்க்க வேண்டும்.

இன்னொரு சுவாரசியமான விசயம் இந்தியாவிலும் இந்த வழக்கம் ஓரிரு இடங்களில் பயன்படுகிறது. ஜமுனா நதி யமுனா நதி ஆவது போல். ..

HK Arun சொன்னது…

//ஏன் சிலர் தமிழில் எழுதும்போது ஜெர்மனியை யேர்மனி என்று எழுதுகிறார்கள்? //

இது தொடர்பான இரவியின் பதில்

//ஜெர்மனியை மட்டுமன்று ஜப்பான். ஜட்டி போன்ற பெயர்களைக் கூட யப்பான், யட்டி என்று எழுதும் வழக்கம் இலங்கையிலேயே பெரிதளவில் இருக்கிறது. இது எந்த மொழியின் தாக்கம் என்று பார்க்க வேண்டும்//

இலங்கையில் என்று குறிப்பிடுவதை விட யாழ்ப்பாணத் தமிழரின் பயன்பாட்டில் என்பதே மிகச் சரியானதாகும்.

இது எதாவது ஒரு பிற மொழியின் தாக்கமா என்று என்னால் திட்டவட்டமாக கூற முடியாது. ஆனால் நான் அறிந்த வரையில் பேச்சு வழக்கில் வட இந்திய ஒலிக்குறிகளை எம்மவர்கள் காலகாலமாக தவிர்த்து உச்சரிப்பதை அவதானிக்க முடிகின்றது.

உதாரனம்:

ஜப்பான் - யப்பான்
ஜேர்மன் - யேர்மன்
பஸ் - வசு
ஹவுஸ் புல் - கவுசு புல்
ஜனங்கள் - சனங்கள்
ஜேசு - இயேசு
முஸ்லிம் - முசுலிம் இன்னும் பல.

கமலஹாசன் - கமலதாசன்
ரஜனிகாந்த - ரயனிகாந்த் என்று அழைப்பவர்களும் உள்ளனர்.

இதுப்போன்ற உச்சரிப்புகள் வழிந்து உச்சரிக்கப்படுவதும் இல்லை. சாதாரன பாமர மக்களின் அன்றாட உபயோகங்களிலும் இவ்வாறு தான் பயன் படுத்தப் படுகின்றது.

'ஹொங்கொங்'கையும் கொங்கொங் என்று உச்சரிப்பது தொடர்பான ஒரு விவாதம் குறித்தும் எனது ஆக்கம் ஒன்றில் எழுதியிருந்தேன்.

http://hongkongeelavan.blogspot.com/2007/11/blog-post_04.html

HK Arun சொன்னது…

வட மொழி ஒலிக்குறிகளின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்டப் போதும், அதன் தாக்கம் யாழ்ப்பாணத்தில் குறைவாக இருந்துள்ளதாகவும் கொள்ளலாம்.

தமிழகத்திலும் வட மொழியின் ஊடுருவலுக்கு முன்பு, வடமொழி ஒலிக்குறிகள் தமிழர் பயன்பாட்டில் இருந்திருக்காது அல்லவா?

Vijayakumar Subburaj சொன்னது…

ஜஸ்வந் - யஸ்வந்

பெயரில்லா சொன்னது…

super.....
இன்று புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டேன்

Thank you so much.....
i'm expecting more from you....

Sridhar Narayanan சொன்னது…

ஏசுவை பற்றி அறிந்து கொள்ள ஏன் ஜெர்மனுக்கெல்லாம் போகிறீர்கள்? அவருடைய தாய்மொழியான அராமிக்கில் அவர் பெயர் 'யேஷ்வா நசரேயன்'தான். நாசரேத்திலிருந்து வரும் யேஷ்வா என்று பொருள்படும். மெல் கிப்ஸனின் 'Passion of the Christ' பாருங்களேன்.

Canonical Bible என்று சொல்லப்படும் சுவிஷேஷங்கள் ஆங்கிலத்தில் மொழி மாற்றப்பட்டபோது consonant ஒலிக்காக 'J' சேர்க்கப்பட்டு ஜீஸஸ் என்று ஆகிவிட்டது.

ஆக, 'ஏசு', 'பேதுரு', 'யோவான்', 'யோசேப்பு' போன்ற ஒலிகள்தான் சரி. ஜீஸஸ், பீட்டர், ஜோஸப் எல்லாம் ஆங்கிலத்திற்காக மாற்றிக் கொண்ட பெயர்கள்தான்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...