மொழிமாற்றம் சில எண்ணங்கள்

உஷா ஒரு கேள்வி கேட்டிருந்தார். 'காசி! comment க்கு சரியாய் ஒரு வார்த்தை தமிழில் சொல்லுங்கள் பார்ப்போம்?'. முதலில் நான் ஒன்றும் தனித்தமிழ் ஆர்வலன் அல்ல. அதை மீண்டும் மீண்டும் சொல்லிகொள்கிறேன். நான் காலையில் 'காப்பி'தான் சாப்பிடுகிறேன். 'காரி'ல் தான் அலுவலகம் வருகிறேன். தமிழ்ப்பித்தன் எல்லாம் கிடையாது. என் குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளேன். அதை மாற்றும் உத்தேசம் கிடையாது. ஆகவே நானும் எல்லாரையும் போல சாதாரண 'குமுதம்-சன்டிவி-தனுஷ்-சிம்ரன்-செரினா-வைகோ' தமிழன்:-)))

உஷா, உங்கள் மேல் கோபமில்லை:-))

எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். இதில் தவறும் இருக்கலாம்.

எந்த ஒரு சொல்லுக்கும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது 'இதுக்கு இது' என்று நேரான சொல் ஒன்றைச் சொல்ல முடியாது. மூல மொழியில் அந்தச் சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கும். அதே பொருளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லும் இருக்கும். அதே போல் ஆக்கவேண்டிய மொழியிலும் இப்படியே. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் என்பது சூழல், தொனி, முதலானவற்றை (context, connotation, etc.) சார்ந்தே இருக்கிறது.

எனவே comment என்பதற்கு கருத்து, விமரிசனம், எண்ணம், மறுமொழி என்று சொல்லாலாம். இதில் 'கருத்து'க்கு, opinion, message, என்று விரிந்து கொண்டே போகும். 'விமரிசன'த்திற்கு, இதே போல் criticism, review, etc. என்று சொல்லலாம். opinion என்பதற்கு எண்ணம், அபிப்ராயம் என்றும், message என்றால் செய்தி, தூது, அறிக்கை என்றும் சொல்ல முடியும். review என்பதற்கு, அலசல், பார்வை, என்று விரியும். இது மொழிகளின் பெருமையைத்தான் குறிக்குமே அன்றி சிறுமையை அல்ல.

நம் வலைப்பதிவுகளில் comment என்பதற்குப்பதில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றை பயன்படுத்துகிறோம். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. comment என்பதில் ஒரு குறைகூறும் தொனி இருப்பதாகவும், 'மறுமொழி' அப்படி எந்தத் தொனியும் இல்லாமல் வெள்ளையாக (neutral) இருப்பதாக எனக்குப் படுகிறது. comment என்பது என்னவோ தேவ வாசகம் என்று எண்ணி அதற்கு நேர் தமிழ்ச் சொல் தேடினோமானால் ஒற்றைசொல் கிடைக்காமல் போகலாம். எனவே தமிழ்மேல் சற்றுக் கோபம் கூட வரலாம். ஆனால் எங்கு அதைப் பயன்படுத்தப் போகிறோம், அந்த இடத்தில் என்ன பொருளை எதிர்பார்க்கிறோம் என்று பார்த்தால் இப்படிப்பட்ட பல விடைகளிலிருந்து பொருத்தமானதை தேர்வுசெய்யமுடியலாம்.

மொழிமாற்றம் செய்யும்போது, குறிப்பாய் கலைச்சொற்களை மாற்றும்போது இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாய் ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யும்போது வினை(verb - transitive, verb - intransitive) வினையின் பெயர்(Noun - act of doing), விளைவின் பெயர் (Noun - result of doing), உரிச்சொல் (adjective) என்ற பல வடிவங்களில் எந்த வடிவம் நமக்குத்தேவை என்று அறிந்து செய்யும்போது ஒரே சொல்லுக்கு வேறு வேறு தமிழ்ச் சொல் வரும். உதாரணமாய், cut, copy, paste எல்லாருக்கும் தெரியும். இதைத் தமிழில் வெட்டு, நகல், ஒட்டு என்று மொழிபெயர்த்தால் அதில் பிழை இருக்கிறது. copy என்ற பெயர்ச் சொல்லுக்கு 'நகல்' சரிதான். ஆனால் copy என்ற வினைக்கு 'நகலெடு' என்பதுதான் சரியாக இருக்கும். view என்பதற்கும் 'பார்' (வினை) 'பார்வை' (வினையின் பெயர்) 'தோற்றம்' (விளைவின் பெயர்) என்று பல பொருள்படும்.

Update என்ற சொல்லுக்கு மொழிமாற்றம் பற்றிய பேச்சு வந்தபோது அதற்கு 'புதுப்பித்தல்' என்று ஒரு சொல் முன்வைக்கப்பட்டது. எனக்கு அப்போது தோன்றிய சில எண்ணங்களை ஒரு சிறு உரையாடல் மூலம் விளக்க முயன்றேன். அது மீண்டும் இங்கே:
____________________________________________________
ஒரு சிறு உணவகத்தில் ஒரு உரையாடல்:
-----------------------------------------------------
'வாங்க அண்ணே, இப்ப எப்படி இருக்குது நம்ம கடை?'
'என்னடா ரொம்ப நாளாக் கடை மூடிக் கிடந்ததேன்னு பாத்தேன். ஓஹோ, கடையைப் புதுப்பிச்சுட்டே(1) போலிருக்கு. எல்லாம் அழகா இருக்குது.'
'ஆமாங்கண்ணே.'
'அதெல்லாம் சரி கடைக்கு உரிமமும் புதுப்பிச்சிட்டியா?)(2) காலாவதி ஆயிருக்குமே...'
'ஓ..ஆச்சுங்க, அதெல்லாம் நேரத்துக்கு செய்திட வேண்டாமா?'
'எல்லாம் சரியாப் பண்ணிருக்கே, ஆனா இந்த இன்றைய ஸ்பெஷல் பலகையை மட்டும் புதுப்பிக்க(3) மறந்துட்டே போலிருக்கே...'
'இல்லீங்களே, அதையும் ஆசாரி கிட்டே குடுத்து உடைஞ்ச கட்டையெல்லாம் சரி பண்ணி, புது பெயின்ட் எல்லாம் அடிச்சுப் புதுப்பிச்சுட்டேனே.'
'அட அது இல்லப்பா, இது இன்னும் நேற்றைய ஸ்பெஷலையே காட்டிட்டு இருக்கேனு சொல்ல வந்தேன்.'
'அட ஆமாங்கண்ணே. டேய் பையா, அந்த போர்டை அழிச்சுவிடு, சாக் பீஸ் கொண்டா, இன்றைய ஸ்பெஷலை சரி பண்ணிடலாம்.'
----------------------------------------------------
புதுப்பித்தல்(1)=refurbish
புதுப்பித்தல்(2)=renew
புதுப்பித்தல்(3)=update

செம்மொழி என்று சொல்லிக்கொண்டு மூன்றுக்கும் ஒரே சொல்லை பயன்படுத்தினால் எனக்கென்னவோ சரியாகப் படவில்லை.
____________________________________________________

எனக்கு என்ன ஆச்சு, நான் என்னவோ தமிழாசிரியர் மாதிரி இப்படி விளக்கமெல்லாம் கொடுத்துக்கொண்டு... நான் எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். உண்மையில் தமிழ் இலக்கணம் படித்தவர் இன்னும் சரியாகச் சொல்லமுடியும். நினைத்துப் பார்க்கிறேன், என் முந்தைய அலுவலகத்தில், வாரம் ஒருவர் சிறு குழுவில் ஏதாவது தலைப்பில் பேசுவோம். அங்கு நான் பேசிய முதல் தலைப்பு, 'How to improve our English vocabulary?'

0 மறுமொழிகள்: